Friday, May 31, 2013

செய்த பாவங்களை செலவில்லாமல் தீர்த்திடும் ஒரு வழி

 


செய்த பாவங்களை செலவில்லாமல் தீர்த்திடும் வழி!
சதுரகிரி மலையின் அருமை பெருமைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அத்தனை சிறப்பான காரண காரியங்கள் அந்த மலையெங்கும் நிறைந்தும் , மறைந்துமிருக்கிறது.அப்படியான ஒரு தகவலை இன்றைக்கு பகிர்ந்து கொள்கிறேன்.
வினை,எதிர்வினை என்பது பிரபஞ்சத்தின் ஆதார தத்துவம்.இதன் அடிப்படையில்தான் எல்லாமே இயங்குகிறது. மனிதனும் கூட தான் செய்யும் வினைகளுக்கான எதிர்வினையை எதிர்கொள்கிறான்.இந்த வினைப் பயனை முழுமையாய் களைந்து “பிறவாப் பேரின்பநிலை” அடைவதே உயரிய சித்த நிலை எனப் படுகிறது.இந்த உயரிய நிலையினை அடைவது எல்லோருக்கும் சாத்தியமில்லை,குருவருள் கிட்டியவர்களுக்கே சாத்தியமாகும்.
சாமான்யர்கள் இந்த வினைப் பயனை அனுபவித்தே தீர்த்திட வேண்டியிருக்கும், இருப்பினும் பரிகாரங்களின் மூலமாய் இதன் தீவிரத்தில் இருந்து காத்துக் கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ முடியும் என்கின்றனர்.அநேகமாய் எல்லா மதங்களிலும் இந்த வினைப்பயன் பற்றிய கூற்றுகளை முன்வைத்து அதை தீர்த்திடவும்,குறைத்திடவும் பல்வேறு உபாயங்களை கூறியிருக்கின்றன.இவை யாவும் செலவு பிடிப்பதும், நடை முறைக்கு சாத்தியமில்லாதவைகளாகவும் இருக்கின்றன.
கர்மவினை குறித்து சித்தர்கள் பல்வேறு விளக்கங்களையும்,உபாயங்களையும் கூறியிருந்தாலும், சதுரகிரி தகவல்களை தேடிக் கொண்டிருந்த போது கிடைத்த ஓர் தகவலை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். கர்ம வினையினை களைய காலங்கிநாதர் தனது பாடலொன்றில் பின்வருமாறு உபாயமொன்றை கூறுகிறார்.
"பெருமையாம் கோரக்கர் குண்டா ஓரம்
பிறங்கும் ஒரு தீர்த்தமதில் நீராடி செய்து
அருமையாம் குண்டாநீர் அள்ளி உண்ண
செய்த பாவவினையெல்லாம் அகன்றுபோமே
ஒருமையாம் உள்ளமதில் கோரக்கர் தம்மை
உன்னியே துதிசெய்ய நல்வாழ்வுண்டகும்"
- காலங்கி நாதர் -
மிகுந்த பெருமைகளைக் கொண்ட கோரக்கர் குண்டாவின் அருகில் ஒரு தீர்த்தம் உள்ளதாம். அந்த தீர்த்தத்தில் குளித்து பின்னர் நேராக கோரக்கர் குண்டாவில் நிறைந்திருக்கும் அருமையானை நீரை அள்ளிப் பருகினால் ஒருவன் செய்த பாவ வினைகள் எல்லம் தீர்ந்துவிடுமாம். அத்துடன் கோரக்கரை மனதில் தியானித்து வணங்கினால் நல்வாழ்வும் கிடைக்குமென்கிறார் காலங்கி நாதர்.
வாய்ப்பிருக்கிறவர்கள் முயற்சித்துப் பாருங்களேன்!
மன அழுத்தம் தீர்க்கலாமே

Wednesday, May 29, 2013

அன்னதானம் செய்வோம் ! அளப்பரிய பலன் பெறுவோம் !!

 

தானம் என்பது நம்மிடம் இருக்கும் பொருளை மற்றவர்க்கு ஈந்து – கொடுப்பவரும், பெறுபவரும் மகிழ்ச்சி அடைவதால் ஏற்படும் – பெரும் புண்ணியம் பெறுவதற்கான புனிதச் செயல். தலைப்படுதானம், இடைப்படுதானம், கடைப்படுதானம் என்று பொதுவாக மூன்று வகைப்படுத்தப்படுகின்ற தானங்களிலும், தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் கொடுக்கப்படும் சுமார் 42 வகை தானங்களிலும்,
மிக மிக உயர்ந்ததாகவும் உன்னதமானதாகவும் அனைவரும் செய்தே ஆகவேண்டிய தானமாகவும் கருதப்படுவது அன்னதானம் மட்டுமே ஆகும்.
உணவின்றி உயிரில்லை, உலகில்லை உணவே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகின்றது. வாழ்க்கைக்கான அத்தியாவசிய தேவையான உணவை மற்றவர்க்கு தானமாக அளிப்பதே அன்னதானம் ஆகும். அன்னதானம் அளவற்ற புண்ணியத்தினை நல்கும். மற்றப் பொருட்களையெல்லாம் தானமாகக் கொடுத்தாலும் பெறுபவர் இன்னும் கொஞ்சம் அதிகம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றச் செய்யும்.
ஆனால், அன்னதானம் செய்தால் மட்டுமே போதும் என்ற சொல்லை தானமாகப் பெறுபவரிடமிருந்து கொண்டு வரும். ஆகையாலே பூரணமான தானம் அன்னதானம் மட்டுமே ஆகும்.
எந்த ஒரு பெரும் வைபவத்திலும் இறுதியாக அமைவது அன்னதானம் மட்டுமே. வைபவத்தில், எந்த ஒரு குறையிருந்தாலும் அந்தக் குறைகள் அனைத்தையும் களைவது அன்னதானம் மட்டுமே ஆகும். உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ஈரேழு ஜன்மங்களையும் தொடர்ந்து வரும். அன்னதானம் மட்டுமே செய்தவரை மட்டும் சென்றடையாமல், செய்தவரின் சந்ததியினரையும் காத்துத் தொடரக் கூடியது.
அன்னதாதா சுகி பவ (அன்னத்தை வழங்குபவர் சுகமாக வாழ்வார்) – என்ற மூதுரையும், அற்றார் அழி பசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி (திருக்குறள் – 226) என்ற திருக்குறளும் அன்னதானத்தின் அருமைகளை அறிவிக்கின்றன. அன்னதானத்தின் பெருமைகளை அளவிடமுடியாது. அதைப்பற்றி அறிவிக்க அனேகம் உள்ளன.
தானம் செய்வதில் பெரும் பெயர் அடைந்தவன் கர்ணன். மஹாபாரத இதிகாசத்தில் கர்ணன், அவன் செய்த கொடையாலும், தர்மத்தாலும், தானத்தாலும் பெரும் பெயர் பெற்றான். கர்ணனுக்குப் பிறகு கொடையில்லை என்ற சொல்வழக்கே உண்டு. கர்ணனைப் போல் யாவரும் தானம் செய்தது கிடையாது. அவன் பெருமையை அனேக சம்பவங்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றன.
ஒரு சமயம், கடும் மழையால் அகிலமே நனைந்திருக்கின்றது. அச்சமயம் பார்த்து வேதியர் ஒருவர் தான் செய்யவேண்டிய ஒரு பெரும் யாகத்திற்காக, காய்ந்த ஸமித்துகளும், மரங்களும் பெற வேண்டி, அனைவரிடமும் வேண்டுகின்றார். சமையலுக்குக் கூட விறகு இல்லாத நிலையில் அனைவரும் தங்களிடம் இல்லை என்று கைவிரித்து விடுகின்றனர். இறுதியாக கர்ணனிடம் வந்து யாசிக்கின்றார்.
அவர் கர்ணனிடமிருந்து பெரும் அளவில் காய்ந்த மரங்களை யாகங்களுக்காக மனமகிழ்வுடன் பெற்றுச் செல்கின்றார். எங்கிருந்து இந்த அளவுக்குக் காய்ந்த மரங்கள் கிடைத்தன என்று அனைவரும் வியந்தனர். அரண்மனையின் உள்ளே சென்று பார்த்தபோது தான் தெரிந்தது, தனது மணிமண்டபத்தினை இடித்து, மண்டபத்தினைத் தாங்கிக் கொண்டிருந்த உத்தரங்களையும், தூண்களையும் (மண்டபத்தின் உள்ளே இருக்கும் தூண்களும், உத்தரங்களும் காய்ந்துதானே இருக்கும்) வெட்டிக் கொடுத்திருக்கின்றான் கர்ணன்.
அந்த அளவுக்கு கொடுப்பதிலே வள்ளல் கர்ணன். வறுமைக்கே வறுமையை வைத்தவன். இடது கை கொடுப்பதை வலது கை அறியாவண்ணம் (இடக்கையில் இருப்பதை வலக்கையில் கொண்டு வரும் நேரம் கூட, தானத்தின் தன்மையை மாற்றிவிடும். ஆகையால், இடக்கையில் எடுத்ததை அக்கையாலேயே வழங்கும் தன்மை கொண்டவன்) கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரத்தை உடையவன்.
கர்ணனின் கொடைக்கு மற்றும் ஓர் உதாரணம். மஹாபாரதப் போரில் கர்ணனின் மார்பை அம்புகளால் துளைத்தெடுக்கின்றான் அர்ஜுனன். ஆயினும் கர்ணனின் உயிர் பிரியவில்லை. அவன் செய்த தர்மம் அவனின் தலையைக் காக்கின்றது. பகவான் கிருஷ்ணர் ஒரு வேதியர் வடிவம் கொண்டு கர்ணனிடம், இதுவரை கர்ணன் செய்த புண்ணியத்தை அனைத்தையும் தானமாக வேண்டுகின்றார்.
இதுவரை செய்த தானத்தைக் கொடுப்பதால் அதற்கென்று ஒரு புண்ணியம் வருமே! அந்தப் புண்ணியத்தையும் தானமாக கொடுக்கின்றார் கர்ணன்.எப்படி? வேதியர் வடிவம் கொண்ட கிருஷ்ணருக்கு ‘இப்பிறப்பில் யான் செய்புண்ணியம் அனைத்தையும் தருகின்றேன்’ என்று உரைக்கின்றார்.
செய்புண்ணியம் எனும் வார்த்தை ஒரு வினைத் தொகை. வினைத் தொகை முக்காலத்தையும் குறிக்கக் கூடியது. உதாரணமாக ஒரு வினைத்தொகை வார்த்தை : ஊறுகாய். ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறப்போகின்ற காய் என்று அர்த்தம் அமையும். அது போல செய்புண்ணியம் எனும் வார்த்தை இதுவரை செய்த புண்ணியம், இப்பொழுது செய்கின்ற புண்ணியம், எதிர்வரப் போகின்ற புண்ணியம் என அனைத்தையும் தானமாக கண்ணனுக்கு அளிக்கின்றான் கர்ணன்.
கர்ணனுக்கு அளப்பரிய வகையில் தானம் செய்த பெரும் பெயர் கிடைக்கின்றது. தானம் பெற்றவுடன் வேதியர், தன் சுய உருக்கொண்டு, கர்ணனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டுகின்றார். கர்ணன் மடிகின்றான். இறந்த பிறகு சொர்க்கத்திற்கு செல்கின்றான் கர்ணன். எல்லாவிதமான சௌகரியங்களும் கிடைக்கின்றது கர்ணனுக்கு. ஆனால், கடுமையான பசி எடுக்கின்றது. சொர்க்கத்தில் பசி என்ற உணர்வே கிடையந்தாயிற்றே!
தனக்கு மட்டும் பசியெடுக்கக் காரணம் என்ன என்று எண்ணியபோது, நாரத மகரிஷி அங்கு தோன்றுகின்றார். கர்ணனிடம் நாரதர் பசி நீங்கவேண்டுமானால் உன் ஆட்காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் என்கிறார். அதன்படி ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால் பசி நீங்குகின்றது. ஆனால், மறுபடிப் பசியெடுக்கின்றது.
மறுபடியும் நாரதரை கர்ணன் நினைக்க அவர் தோன்றுகின்றார். அவரிடம் கர்ணன் தனக்குப் பசியெடுப்பதற்கும் ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால் பசி நீங்குவதற்கும் காரணம் கேட்கின்றார். அதற்கு நாரதர் உன் வாழ்வில் நீ அனைத்து தானங்களையும் செய்திருக்கின்றாய். ஆனால் ஒரே ஒரு தானத்தைத் தவிர. அது அன்னதானம். அன்னதானம் செய்யாமல் சொர்க்கத்திற்கு வந்ததால் இங்கு வந்தும் உனக்குப் பசியெடுக்கின்றது.
உன் பூலோக வாழ்நாளில் ஒருநாள் உன்னிடமிருந்து தானம் பெற்றவர் அன்னசத்திரம் எங்கிருக்கிறது எனக் கேட்க அதற்கு நீ உன் ஆட்காட்டி விரலைக் காட்டி அங்கிருக்கின்றது என்றிருக்கின்றாய். நேரடியாக அன்னதானம் செய்யாவிட்டாலும், அன்னதானத்திற்கான காரணியாக விளங்கிய உன் ஆட்காட்டி விரல் மட்டும் அன்னதானப் பலன் பெற்றது.
ஆகையால் உன் ஆட்காட்டி விரலை வாயில் வைக்கும்போது சொர்க்கத்தின் முழுப்பலனாகிய பசியின்மையும் சேர்த்து உனக்குக் கிடைக்கின்றது என்றார். அன்னதானம் செய்யாமலேயே அன்னசத்திரம் இருந்த இடத்தைக் காட்டியமைக்கே இந்தப் புண்ணியம் என்றால் அன்னதானத்தின் மகிமையை எப்படி அளவிடமுடியும்.
கர்ணனுக்கு ஒரு எண்ணம் தோன்றுகின்றது. அன்னதானத்தையும் அளப்பரிய வகையில் செய்யத் தோன்றுகின்றது. பரம்பொருளிடம் தன் எண்ணத்தை முன்வைக்கின்றான் கர்ணன்.
கி.பி. எட்டாம் நூற்றாண்டு. மாமல்லபுரத்தைக் கட்டிய நரசிம்ம பல்லவன் காலம். நரசிம்ம பல்லவனின் படைத்தளபதி பரஞ்சோதி. மகா வீரர்.
பரஞ்சோதி படைக் கலன்களைக் கையாள்வதில் பெரும் தேர்ச்சி பெற்றிருந்தார். அதேசமயம் சிவத் தொண்டிலும், சிவனடியார்க்குத் தொண்டு செய்வதிலும் மனம் அதிகமாகச் சென்றது.
நரசிம்ம பல்லவனுக்காக, வடபுலம் சென்று வாதாபி எனும் நகரைக் கொளுத்தி வெற்றி வாகை சூடி வருகின்றார். பரஞ்சோதி படைத் தளபதியாக இருந்தாலும், ஆழ்மனதில் சிவத்தொண்டு செய்யும் மனப்பாங்கே அதிகமாக இருந்தது. வெற்றிச் செய்தியை நரசிம்ம பல்லவனுக்குச் சொல்லிய அதே நேரம் தன் உள்ளக் கிடக்கையாகிய சிவத்தொண்டு புரிவதே தன் விருப்பம் என்று சொல்கின்றார்.
மனம் மகிழ்ந்த பல்லவன் பரஞ்சோதியின் விருப்பத்திற்கிணங்க, அவருக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தந்தான். திருவெண்காட்டு நங்கை எனும் தன் மனையாளுடன் இல்லறம் நடத்திவந்தார். சீராளன் எனும் செல்வ மகன் பிறந்தான். மகிழ்வான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர்.
சிவனடியார்களில் தான் ஒரு சிறு அடியவர் என அறிவித்துக் கொண்டமையால் அவர் சிறுத்தொண்டர் என அன்புடன் அழைக்கப்பட்டார்.
ஒவ்வொரு நாளும் சிவனடியாருக்கு அன்னதானம் இட்ட பிறகே உண்ணும் வழக்கம் கொண்டு, அந்த சிவப் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தார். அப்பணியை குடும்பமே உவந்து செய்து வந்தது.
அவரின் சிவத்தொண்டினை உலகறியச் செய்ய சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார். ஒரு நாள், வைரவர் (வடதேசத்திலிருந்து வந்த காபாலிகர். சிவச் சின்னங்களோடு, கையில் மண்டையோடு, சூலாயுதம் தரித்து) வேடம் கொண்டு, சிறுத்தொண்டர் இல்லம் சென்றார்.
அச்சமயம், சிறுத்தொண்டர் சிவனடியார் எவரேனும் இருக்கின்றாரா என்று பார்த்து அழைத்து வர வெளியில் சென்றிருக்கின்றார்.
வைரவர் வேடம் கொண்ட சிவமூர்த்தியைக் கண்ட சிறுத்தொண்டரின் மனைவி ஆவலுடன் அன்னமிட அழைக்கின்றார். அவரோ, ஆண்கள் இல்லாத வீட்டில் நுழையமாட்டேன், அருகில் (உள்ள ஆலயமாகிய திருச்செங்காட்டங்குடியின் ஸ்தல விருக்ஷமாகிய) அத்தி மரத்தின் கீழ் அமர்கின்றேன், உன் கணவர் வந்தால் வரச்சொல் என்று சொல்லிச் சென்றுவிட்டார்.
சிவனடியார் எவரையும் காணாமல் மனம் நொந்து வருகின்ற கணவரைக் கண்டு, அவரின் மனைவி நடந்ததைச் சொல்ல சிறுத்தொண்டரோ மனம் மிக மகிழ்ந்து அத்தி மரத்தின் கீழ் அமர்ந்திருந்த வைரவர் கோலம் கொண்ட வடகயிலை நாதனின் பாதத்தில் விழுந்து அன்புடன் அடியவன் இல்லம் வந்து அமுது கொண்டு அருள்பாலிக்க அழைக்கின்றார்.
வைரவரோ, நான் கேட்கும் உணவை உன்னால் அளிக்க முடியாது. ஆகையால் உன் இல்லம் வரமுடியாது என்கின்றார். சிறுத்தொண்டர் தாங்கள் கேட்கும் உணவை மிக நிச்சயமாக அளிப்பேன் என்று வாக்குக் கொடுக்கின்றார்.
அனைவரும் அதிரும் வண்ணம் வைரவர் ‘நான் ஆறு மாதத்திற்கு ஒரு முறைதான் உணவு கொள்வேன். அந்த உணவு ஐந்து வயதுடைய, குடும்பத்திற்கு ஒரே வாரிசான ஆண் குழந்தையின் கறியை மட்டுமே சாப்பிடுவேன். அதுவும் அக்கறியை அக்குழந்தையின் அன்னை கால்களைப் பிடிக்க தந்தை அரிவாளால் அரிந்து சமைக்க வேண்டும். இந்தச் செயலைச் செய்யும் போது எவர் கண்ணிலும் கண்ணீர் வரக்கூடாது. மனமகிழ்வுடன் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் தான் சாப்பிடுவேன்’ என்கின்றார்.
எந்தக் குழந்தையின் தாய் தன் ஒரே மகனை வெட்டுப்படுவதைப் பார்க்க முடியும்? எந்தத் தந்தைதான் தன் ஒரே குழந்தையை வெட்ட முடியும்? அதுவும் அச்செயலை மனமகிழ்வுடன் எவர்தான் செய்ய முடியும்? கலங்கிய நிலையில் வீட்டிற்கு வரும் கணவரை ஆவலுடன் கேட்கின்றார் அவரின் மனைவி. நடந்ததை விவரிக்கின்றார் சிறுத்தொண்டர்.
வேறு எவரிடமும் சென்று உங்கள் குழந்தையை வெட்டிக் கொடுங்கள் என்று கேட்க முடியாதே என்று வருந்துகின்றார்.  இருவரும் சேர்ந்து ஒரு முடிவெடுக்கின்றனர். தமது ஒரே குழந்தையை ஆசையும் பாசமும் சேர்த்து வளர்த்துவரும் செல்வ மகனை ஐந்து வயதுடைய சீராளனையே கறி சமைத்து அன்னமிட முடிவெடுக்கின்றனர்.
பாடசாலை சென்றிருந்த சீராளனை அழைத்து வருகின்றார் சிறுத்தொண்டர். ஏதுமறியாக் குழந்தை ஆசையுடன் தந்தையின் கழுத்தைக் கட்டி முத்தமிடுகின்றது. வீட்டிற்கு வந்தவுடன் குழந்தையைக் குளிப்பாட்டி அழகு செய்து அமரவைக்கின்றார் திருவெண்காட்டு நங்கை. நங்கை கால் பிடிக்க சிறுத்தொண்டர் குழந்தையை அரிவாளால் அரிந்து தர குழந்தைக் கறி செய்கின்றனர்.
இதை அனைத்தையும் முடித்து வைரவரை அழைக்கின்றார். வைரவரும் சிறுத்தொண்டரின் இல்லம் வந்து அன்னமிடச் செல்கின்றார். நங்கை அன்னத்துடன் குழந்தைக் கறியையும் கொண்டு வந்து பரிமாறுகின்றார். அப்போது வைரவர் தன்னுடன் அமர்ந்து சாப்பிட சிறுத்தொண்டரை அழைக்கின்றார்.
வைரவரின் மனம் கோணக் கூடாது என எண்ணி, அவர் அருகே அமர்கின்றார். சிறுத்தொண்டருக்கும் குழந்தைக் கறியுடன் உணவு பரிமாறப்படுகின்றது. தன் மகனின் கறியை தானே சாப்பிடவும் துணிகின்றார். வைரவர் மேற்கொண்டு சிறுத்தொண்டரை நோக்கி உனக்கு மகன் இருக்கின்றான் எனில் அவனையும் அழைத்து வந்து சாப்பிடச் சொல்லுங்கள் என்கின்றார்.
தன் மகனின் கறியைத் தான் சமைத்தோம் என்று சொன்னால் இறந்தவர் வீட்டில் வைரவர் சாப்பிட மாட்டாரோ என்று எண்ணி அஞ்சி, ‘அவன் உதவான்’ என்கின்றார். வைரவரோ, ‘இல்லை இல்லை. அவன் வந்தால் தான் சாப்பிடுவேன்’ என்கின்றார். மனம் கலங்கி நின்ற சிறுத்தொண்டரை நோக்கி, வைரவர், உங்கள் மகனை அழையுங்கள் என்கின்றார்.
நிலைதடுமாறி, வாசலில் நின்று ‘சீராளா’ என்கின்றார். மகன் எப்படி வரமுடியும்? வைரவர் திருவெண்காட்டு நங்கையை நோக்கி, நீங்கள் சென்று அழையுங்கள் என்கின்றார். அவரும் தலைவாசல் வந்து ‘சீராளா’ என்கின்றார்.
அனைவரும் அதிசயக்கும் வகையில், சீராளன் பாடசாலையிலிருந்து வரும் நிலையில், ‘அப்பா, அம்மா’ என்று அழைத்தபடியே வர, பெற்றோர்கள் அவனை அப்படியே வாரியெடுத்து உச்சிமோர்ந்து மகிழ்ந்து உள்ளே வர அங்கே இருந்த உணவையும் வைரவரையும் காணவில்லை. சிவனும் பார்வதியும் இடபாரூடராகக் காட்சி நல்கினார்கள். அனைவரும் நற்கதி பெற்றனர்.
கர்ணனுக்கும், சிறுத்தொண்டருக்கும் என்ன சம்பந்தம்?
சொர்க்கத்திலும் பசியெடுத்த கர்ணன் பரம்பொருளிடம், தான் மறுபடியும் பூலோகத்தில் பிறந்து, கொடைக்கு ஒரு கர்ணன் என்று பெயர் எடுத்தது போல அன்னதானத்திலும் தான் ஒரு பெரும் பெயரும் பேறும் பெற வேண்டும் என்று பெரும் தவம் செய்து வேண்டிக்கொண்டான்.
(கர்ணனின் முற்பிறப்பு ஸஹஸ்ர(1000)கவசன் என்றும், நரநாராயணர்களால் 999 கவசங்கள் அறுபட்டு, சூரியனிடம் அடைக்கலம் புகுந்தவன் என்றும், அவனே மறுபிறப்பில் ஒரே ஒரு கவசத்துடன் பிறந்த கர்ணன் என்றும் அபிதான சிந்தாமணி கூறுகின்றது.)
அந்தக் கர்ணனின், மறுபிறப்புதான் சிறுத்தொண்டர். எவரும் செய்யத் துணியாத வகையில் வைரவருக்கு அன்னமிட்டவர். சிவ பதவி அடைந்தவர். 63 நாயன்மார்களுள் ஒருவராகக் கொண்டாடப்படுபவர். அவரின் தூய்மையான பக்தியையும், இறைத் தொண்டினையும், ஆழ்ந்த நம்பிக்கையும், அன்னமிடுதலில் உள்ள அளவிலா அவாவினையும் இன்றளவும் உலகம் மெச்சுகின்றது.
கர்ணன் வேண்டி விரும்பிப் பெற்ற பிறவியே சிறுத்தொண்டர். முழுக்க முழுக்க அன்னதானத்திற்காகவே பிறப்பெடுத்தவர். அன்னதானமிட்டு அளப்பரிய பேறு பெற்றவர். அருந்தவம் செய்ததாலேயே அன்னதானம் செய்ய முடிந்தது.
அன்னதானம் செய்தால் அடுத்து வரும் ஏழு பிறப்புகளுக்கும் தர்மம் தலைக்காக்கும் என்றும், சந்ததிகளை வளமாக வாழவைக்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்னதானம் செய்வதால் எல்லா விதமான பலன்களும், வேண்டுதல்களும் நிறைவேறும்.
அன்னதானம் செய்வோம் ! அளப்பரிய பலன் பெறுவோம் !!*

திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


நால்வர் காட்டிய நல்வழி

 திருச்சிற்றம்பலம்
 
அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நான்கு பேரும் தமிழ் சைவ வழிபாட்டுக்கு மிகப் பெரும் தொண்டாற்றிய அருளாளர்கள். இவர்கள் தம் தமிழ்ப்பாசுரங்களால் மக்களைத் தன்வயப்படுத்தி, சைவ நெறியில் திகழச்செய்து, சைவ மேன்மைக்கு வழிகோலினார்கள்.
அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூன்று பேரும் எழுதியவை அனைத்தும் தேவாரம் ஆகவும், மாணிக்கவாசகர் எழுதியது திருவாசகம் எனவும் பன்னிரு திருமுறைகளினுள் தொகுக்கப்பட்டுள்ளது.
கோயில் என்றாலே பொருள் படும் சிதம்பரம் – தமிழ் திருமறைகளை வெளிக்கொணர்ந்த ஸ்தலம்.
பாணர்கள் (அரசவையில் பாடல்கள் பாடிப் பரிசு பெறுவோர்) ராஜராஜசோழனிடம் சில பாடல்களைப் பாடிக்காட்ட, அந்தப் பாடல்களைக் கேட்ட அரசன் அதன் அருமை பெருமைகளில் பெரிதும் மனமகிழ்ந்து, மேலும் பல பாடல்களைக் கேட்க விரும்ப, அவர்கள் எங்களிடம் சில பாடல்களே உள்ளன என்றும் அவை சிதம்பரத்தின் மேற்கு கோபுரத்தின் கீழ் கிடந்தவை என்றும் மேலும் பல அங்கு கிடைக்கலாம் என்றும் சொல்ல, உடன் சோழன் சிதம்பரம் வந்து, அந்த பாடல்களைத் தேடிவந்து, விநாயகரைப் பணிய, விநாயகர் ஓலைகளை உள்ள திசையைக் காட்டியருள, [அந்த விநாயகரே திருமுறைகாட்டிய விநாயகர் - மேற்கு கோபரத்தின் எதிரே உள்ள சந்நிதி], மேற்கு கோபுரத்தின் குகை போன்ற பகுதியில் காலம் காலமாக இருந்த திருமுறை ஓலைகளை, ராஜராஜசோழன் பக்தி பரவசம் பெருக கண்டு வெளியெடுத்தான்.
நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு பாசுரங்களைத் தொகுத்தான். தில்லைத் திருச்சிற்றம்பலத்திலிருந்து பாடல்கள் பெறப்பட்டதால், இனி எங்கு திருமுறைகள் பாடப்பட்டாலும் “திருச்சிற்றம்பலம்” என்று ஆரம்பித்து, பாடல்கள் முடிந்த பிறகு “திருச்சிற்றம்பலம்” என்று முடிக்க வேண்டும் என்ற நியதியைக் கொணர்ந்தான்.
ராஜராஜசோழன் மிகப் பெரும் சிவபக்தன். இவன் காலத்தில் சைவம் தழைத்தோங்கியது. வைணவக் கோயில்களின் திருவிண்ணகரங்களையும் புதுப்பித்தான்.
இந்து சமயம் பெரும் வளர்ச்சியடைந்தது. ராஜராஜசோழன் காலமே தமிழகத்தின் பொற்காலம் எனப் பெருமையடைந்தது. தக்ஷ்ண மேரு என்று புகழப்பெறும் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டி, வரலாற்றின் பொன்னேட்டில் இடம்பெற்றான்.
நடராஜர் மீது கொண்ட அளப்பரிய பக்தியால், அளவை (measuring) அலகுகளுக்கு (units) கடவுளர்களின் பெயரையே வைத்தான்.ராஜராஜ சோழன் சைவ வைணவ ஒற்றுமையைப் போற்றியவன். தன்னாட்சியில் நீட்டலளவைக்கு ‘உலகளந்தான்’ என திருமால் பெயரையும், முகத்தலளவையாகிய மரக்காலுக்கு ‘ஆடல் வல்லான்’ என்றும் பெயரிட்டான்.
ராஜராஜனின் நடராஜ பக்திக்குச் சான்றாக, அவனின் மகன் ராஜேந்திர சோழன் மார்கழித் திருவாதிரையில் பிறந்தான். ராஜேந்திரனும் நடராஜர் மீது பெரும்பக்தி கொண்டு, கடல் கடந்த நாடுகளையும் வென்று, பெரும் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்தான். கங்கை கொண்ட சோழபுரம் கட்டி, பக்தியைக் காட்டினான்.
திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய பாடல்கள் தேவாரமாகத் தொகுக்கப்பட்டது. மணிவாசகரின் திருவாசகம் தனி திருமுறையாகத் தொகுக்கப்பட்டது.
நால்வர்களின் பாடல்களாலும் சைவம் தழைத்தோங்கியது. அவை, பல தமிழகக் கோயில்களை வளம்பெறச் செய்தன. தமிழ்ப்பாடல்களுக்கு தெய்வீக சக்தி உண்டு என்ற கருத்தை நிலைநிறுத்தின. தமிழும் சைவமும் பெரும் வளர்ச்சி பெற்றன.
தமிழ் சமுதாயத்தில், இந்த நால்வர்கள் விதைத்த விதை, பெரும் பக்தி இயக்கமாக மாறியது. இவர்களின் பாடல்கள் அன்றைய ஆட்சி செய்வோரின் மனதிலும் பதிந்தது. கோயில்கள், விண்ணகரங்கள் பல செழுமை பெற்றன. புதிதாக பல கற்றளிகள் கட்டப்பட்டன.
விளைநிலங்கள் நிவந்தங்களாக மானியங்களாக வழங்கப்பட்டன. மொத்தத்தில் இந்துக் கோயில்கள் மிகப் பெரும் வளர்ச்சியடைந்தன.
அவர்களின் பண்ணோடு இசைந்த பாடல்கள் புத்துணர்ச்சி தருவதாக இருந்தன. பக்தியை மிக எளிமையாக்கின. இவர்கள் காலத்திற்கு முன்னெல்லாம், இறைவனை அடைய ஆண்டாண்டுகளாய் தவம் இருக்க வேண்டும் என்ற நினைப்பை மாற்றி தூய பக்தியொன்றே இறையருளை அடையும் வழி என்றன.
பல பழைய மரபுகளை உடைத்தன. பக்தியை ஊட்டின. வேறு மதங்களைச் சார்ந்து உறங்கிக்கிடந்தவர்களை தம் தமிழ்ப்பாடல்களால் தட்டி எழுப்பின. ஆன்மீக புரட்சியே எழுந்தது.
சங்க காலத்தில் பக்தி இலக்கியம் குறைவுதான் என்றாலும், நன்மறைகளை போதித்தன. ஆயினும் இடைக்காலத்தில் இவர்களின் வரவு தமிழ் பக்தி இயக்கத்திற்கு மிகப் பெரும் பக்கபலமாக விளங்கியது. மக்களும் தமிழ்ப்பாசுரங்களை பாடலாயினர்.
சமீப காலம் வரை தமிழ்ப்பாசுரங்களை பாடியபிறகுதான் மதிய உணவு என்ற கொள்கை கொண்டு, பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு தமிழ் ஞானத்தை வளர்த்தனர்.
நால்வர் – ஈசன் – ஆட்கொள்ளல் :
நஞ்சுண்ட நாயகனாகிய ஈசனை ஞானசம்பந்தர் கொஞ்சியும், திருநாவுக்கரசர் அஞ்சியும், மணிவாசகர் கெஞ்சியும், சுந்தரர் விஞ்சியும் பதிகங்கள் பாடியுள்ளனர்.
ஞானசம்பந்தரை பாலைக் காட்டியும், திருநாவுக்கரசருக்கு சூலை (நோய்) காட்டியும், மணிவாசகருக்கு காலை காட்டியும், சுந்தரரை ஓலை காட்டியும் ஈசன் தடுத்தாட்கொண்டார்.
நால்வரும் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்மறைகளின் வழி நின்று பாடி அருள்பெற்றனர். சிதம்பரம் தில்லைக் கோயிலுக்கு நான்கு வேதங்களே நான்கு கோபுரங்களாக அமைந்துள்ளன. நான்கு கோபுர வழியாகவும் மேற்கண்ட நால்வரும் வழிவந்து வழிபாடாற்றியுள்ளனர்.
கிழக்கு கோபுரம் வழியாக மாணிக்க வாசகரும், தெற்கு கோபுரம் வழியாக திருஞானசம்பந்தரும், மேற்கு கோபுரம் வழியாக திருநாவுக்கரசரும், வடக்கு கோபுரம் வழியாக சுந்தரரும் வந்து நடராஜப் பெருமானை தரிசித்து பேறுபெற்றனர்.
நடராஜப் பெருமான் ஏன் அவர்களின் மனதில் இந்த குறிப்பிட்ட வாசல் வழியாகத் தான் வரவேண்டும் என்று பணித்தார்?
அதற்கு அழகான பதிலை ஆன்றோர்கள் தந்தருளியுள்ளனர். திருஞான சம்பந்தர், சீர்காழி தோணியப்பரின் அருளால் உமையம்மையின் திருஞானப்பால் குடித்த, குழந்தை வடிவினர். பெரியவர்கள் குழந்தைகளைக் கொஞ்சுவது போல, குழந்தையே தெய்வத்தைக் கொஞ்சும் விதத்தில் பாடல்களைப் பாடியுள்ளவர்.
குழந்தை நம்மைத் தேடி வரும்போது, நாமே அந்தக் குழந்தையை நோக்கிச் சென்று கொஞ்ச விழைவது போல, தாமே முன்னோக்கிச் சென்று (நடராஜப் பெருமான் தெற்கு நோக்கி காட்சியருளுபவர்) குழந்தையை வரவேற்பது போல, நடராஜப் பெருமான் சம்பந்தரை தெற்கு கோபுரம் வழியாக வரச் செய்து அருள்பாலித்தார்.
திருநாவுக்கரசர் மிகவும் பணிவானர். உழவாரப் பணி செய்தவர். மகேஸ்வரனின் அருள் பெற மிகவும் கெஞ்சிப் பாடியவர். திருநீறு பூசிய பின் சூலை எனும் வயிற்று வலி நோய் தீர்ந்து சிவனை நெக்குருகப் பாடியவர்.
அவருக்காக, அருள்தரும் அபய ஹஸ்தத்தினால் (நடராஜரின் வலக்கை மேற்கு நோக்கி நீண்டிருக்கும்) அருள, அப்பர் சுவாமிகளை மேற்கு கோபுர வாயில் வழியாக வரச் செய்து அருள்பாலித்தார்.
சுந்தரர் – வன் தொண்டர். ஓலையைக் காட்டி சுந்தரன் தன் அடிமை என திருவிளையாடல் செய்து, சுந்தரரை ஈசன் ஆட்கொண்டருளினார்.
ஈசனை ஒரு நண்பன் போல நினைத்தவர். விஞ்சிப் பாடியவர். பரமேசனையே தன் காதலிக்காக தூது போகச் சொல்லியவர்.
ஒரு நண்பனானவர் எப்படி தன் நண்பரின் பின்பக்கத்திலிருந்து வந்து தோள் மேல் கை போட்டு நட்பு கொண்டாடுவாரோ அதே போல, சுந்தரர் நடராஜப் பெருமானை (நடராஜரின் பின் பக்கமாகிய வடக்கு) வந்தடைந்தார். சுந்தரரை வடக்கு கோபுர வாயில் வழியாக வரச் செய்து அருள்பாலித்தார்.
மாணிக்கவாசகர் – இவர் பாடல்களின் வாசகங்கள் ஒவ்வொன்றும் மாணிக்கம் போல மதிப்புடையதாக இருந்ததால், இறைவனாலேயே மாணிக்கவாசகர் என போற்றப்பட்டவர்.
திருப்பெருந்துறையில் கல்லால மரத்தடியின் கீழ் யோகநிலையில் அமர்ந்திருந்த தட்சிணாமூர்த்தியின் இடது புறத் திருவடியின் திருவொளி கண்டு ஞான மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்தவர்.
ஆகையால், அவரை (நடராஜப் பெருமானின் இடது புறமாகிய) கிழக்கு கோபுரம் வழியாக வரச் செய்து அவருக்கு அருள்பாலித்தார்.நால்வர்கள் காட்டிய ந(நா)ல்வழியே சென்று, அவர்கள் காட்டிய அறநெறியைப் பின்பற்றி, அவர்களின் பாடல்களை பக்தியோடு பாடி, பரமனின் அருளைப் பெறுவோம்.


http://www.vempady.com/?p=747


*


சைவசமயக் குரவர்கள்


 

 

 

திருச்சிற்றம்பலம்

கும்பாபிஷேக வழிபாடு பலன்கள்

 


இறைவன் ஒளியே உருவாகத் திகழ்பவர். ஜோதி எங்கும் நிறைந்திருந்தாலும் கல்லிலே அதிகம் உள்ளது. ஒரு கல்லை மற்றொரு கல் மீது தட்டினால் நெருப்பு வருவதை காண்கிறோம். ஆதலால், தெய்வ வடிவங்களைக் கல்லினால் செதுக்கி அமைக்கிறார்கள். இறைவன் தனது அகண்டா காரமான சக்தியை ஒரு விக்ரகத்திற்குள் நிலைபெறச் செய்து கொண்டு அடியவர்களுக்கு அருள் பாலிக்கின்றான்.
எல்லா இடங்களிலும் பரந்து விரிந்து இருக்கின்ற இறைவனுடைய சக்தியை ஈர்த்துச்சேர்த்து அனுப்புகிறது மூலஸ் தானத்தில் உள்ள மூர்த்தி. ஏனைய இடங்களில் இறைவனை வழிபட்டால் வினைகள் வெதும்பும். ஆலயத்தில் உள்ள மூர்த்திக்கு முன் வழிபட்டால் வினைகள் வெந்து போகும். ஆகவே, நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஞானிகளும் இந்த உலகம் வாழ அமைத்தவை ஆலயங்கள்.
அந்த ஆலயத்தில் கருவறையில் சுவாமி மந்திர வடிவாக இருந்து ஆன்மாக்களுடைய மாயா கன்மங்களை நீராக்கி அருள் புரிகின்றான். மந்திர ஒலிக்கு ஆற்றல் அதிகம்.ஆகை யினால்தான் பெரியவர்கள் வேத மந்திரத்தினாலே இறைவனை வழிபட்டார்கள்.
ஆகவே, கோவிலுக்கு சென்று கடவுளை வணங்க வேண்டும். இறைவனுடைய அருளைப்பெற்ற மகான்களாக இருந்தாலும் ஆலய வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்.
கல்லினால் திருவுருவத்தை அமைத்துத் தானியவாசம், ஜலவாசம் வைத்து அந்த மகாதேவனுடைய மந்திரங்களை எழுதி மந்திர யந்திரத்தை 48 நாள் வழிபாடு செய்து அதை அந்த மூர்த்திக்கு கீழே வைப்பார்கள். அந்த மந்திர சக்தி மேலே வரும்.
அந்த வேத சிவாகமத்திலே வல்லவர்களாக இருக்கின்றவர்கள் யாகசாலை அமைத்து இனிய மந்திரங்களை ஓதி காலங்கள் தோறும் யாக அக்னி வளர்த்து அதில் ஜோதியை விளையுமாறு செய்கிறார்கள்.
அப்படி விளைந்த ஜோதியைக் கும்பத்தில் சேர்ப்பார்கள். கல்லினாலும் மண்ணினாலும் சுதையினாலும் மனிதரால் உருவாக்கப்பட்டவை விக்கிரகங்களாகும். அவற்றிற்குத் தெய்வ சக்தியை உண்டு பண்ணுவதற்காகச் செய்யப்படும் பல கிரியைகளில் ஒன்றுதான் கும்பாபிஷேகம். கும்பாபிஷேகம் காண்பது என்பது வாழ்நாளில் கிடைப்பதற்கு அரிய ஒரு வாய்ப்பாகும்.
கும்பாபிஷேகத்தை நேரில் கண்டு, கடவுளை வணங்குபவர்களுக்குத் திருவருள் நிரம்பத் துணை செய்யும். ஒருவர் நியாயமாகக் கணக்கு எழுதி, நியாயமாக செலவழித்து நியாயமாக வரி கட்டி வியாபாரம் பண்ணினார். அவருக்கு மாதம் ஆயிரத்து நானூறு ரூபாய் வருமானம் கிடைத்தது. பன்னிரண்டு ஆண்டுகள் வியாபாரம் பண்ணினார். இரண்டு லட்சத்து ஓராயித்து அறுநூறு ரூபாய் கிடைத்தது.
இன்னொருத்தர் கிணறு வெட்டினார். ஓர் அண்டா கிடைத்தது. எடுத்துப் பார்த்தால் தங்க டாலர்கள், கொண்டு போய் விற்றார். டாலர் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய். இருநூறு டாலருக்கு இரண்டு லட்சம் ருபாய் வந்தது. பன்னிரண்டு ஆண்டுக் காலம் இரவு பகலாகப் பாடுபட்டவருக்கு இரண்டு லட்ச ரூபாய் சேர்ந்தது. பாடுபடாமலே, நெற்றித் தண்ணீர் நிலத்தில் விழாமலே கிணறு வெட்டியவருக்கு இரண்டு லட்ச ரூபாய் வந்தது.
அதுபோல், பன்னிரண்டு ஆண்டுகள் ஆலயத்திற்குச் சென்று இறைவனை மன, மெய்களினாலே வழிபட்டவருக்கு என்ன என்ன அருள் வருமோ, அத்தனை அருளும் கும்பாபிஷேகத்தைச் சேவித்த ஒரு விநாடியில் வரும். புதையல் எடுத்துத் தனவந்தன் ஆவது போல், கும்பாபிஷேகம் சேவித்தவருக்குத் திருவருள் கைகூடி வரும். ஆகவே கும்பாபிஷேகத்தை கண்டு வணங்குவது மிக மிக இன்றியமையாதது.
கலசத்தில் இருப்பது என்ன?
கோபுர கலசங்கள் சக்தி வாய்ந்தவை. மனித உடலுக்கு தலை உச்சி போன்று கோவிலுக்கு கோபுர கலசங்கள் உள்ளன. இந்த கலசங்களில் வரகரிசியை போட்டு வைத்திருப்பார்கள். அது உள்ளே இருக்கும் நவ தானியங்களையும், கட்டைகளையும் கெடாமல் பாதுகாக்கும். கலசங்களில் சுற்றி கட்டப்படும் நூல் நமது நாடி, நரம்புகளை பிரதிபலிக்கிறது.
முக்கிய பூஜைகளின் போது தர்ப்பை புல் பயன்படுத்தவார்கள். தர்ப்பை புல்களுக்கு கிரகண தாக்குதல்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிவிடும் ஆற்றல் உண்டு. எனவே தான் கோவில் விழாக்களில் தவறாமல் தர்ப்பை புல் பயன்படுத்தப்படுகிறது.
45 நாட்களுக்கு பலன் உண்டு………
மகா கும்பாபிஷேகம் நடக்கும் போது கோவில் உள்ளேயும், பிரகாரங்களிலும் பிரபலங்கள், முக்கியஸ்தர்கள் நிறைந்து இருப்பார்கள். இதனால் சாதாரண பக்தர்கள் மகா கும்பாபிஷேகத்தை நேரில் கண்டுகளிக்க முடியாமல் போய் விடுவதுண்டு. இது சாதாரண பக்தர்களுக்கு ஏமாற்ற மாக கூட மாறலாம்.
ஆனால் ஆகம விதி களை நன்கு அறிந்தவர்கள், “எந்த ஒரு பக்தரும் மனக்குறை அடைய தேவை இல்லை” என்கிறார்கள். ஏனெனில் மகா கும்பாபிஷேகம் நடந்து முடிந்த பிறகு 45 நாட்களுக்கு மண்டல பூஜை கள் தினமும் நடத்தப்படும். இந்த 45 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் கோவிலுக்கு சென்று மனம் உருகி வழிபட்டால் கும்பாபிஷேகத்தை கண்டுகளித்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
நோய் தீரும்………
கும்பாபிஷேகத்தை முன்னிட்டுயாக குண்டங்களில் அரிய மூலிகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் போடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பூஜைகள் நடத்தி முடிக்கப்பட்ட பிறகு யாக குண்டங்களில் தேங்கும் புனித சாம்பல் பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்த புனித சாம்பல் மிக, மிக சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது நோய் தீர்க்கும் ஆற்றல் கொண்டது.
இந்த சாம்பலை கருப்பு மையாக தயாரித்தும் வைத்துக் கொள்வார்கள். முக்கிய விஷயங்களுக்காக வெளியில் செல்லும்போது, அந்த மையை நெற்றியில் சிறிது பூசி சென்றால், எந்த நோக்கத்துக்காக செல்கிறோமோ அந்த நோக்கம் எளிதில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
ராஜகோபுரம் உணர்த்துவது என்ன?
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். ஒரு கோவிலில் பல்வேறு கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருக்கும். கோவிலில் உள்ள மற்ற கோபுரங்களை விட ராஜ கோபுரம் மிக உயர்ந்து இருக்கும். கோவிலின் முகப்பில் உள்ள இக்கோபுரம் ஸ்தூல்லிங்கம் எனப்படும் இது தொலைவில் இருப்பவர்களுக்கு கண்டு வழிபடும் படியாக அமைந்துள்ளது.
இந்த வகை ராஜகோபுரங்கள் 2,5,7,9,11 என்னும் எண்ணிக்கையில் அமைந்த நிலைகள் உடையதாக அமையும். இக்கோபுரத்தின் பல்வேறு வகையான வடிவங்களும் சிற்பங்களாக இடம் பெற்றிருக்கும். ராஜகோபுரம் நம் கண்ணில் பட்டதும் கைகூப்பி வணங்க வேண்டும்.
செல்வம் தரும் வேதபாராயணம்……….
மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு நடைபெறும். யாகசாலை பூஜைக் காலங்களில் வேத விற்பன்னர்களால் வேதபாராணயமும், ஆழ்ந்த புலமைமிக்க ஓதுவார்களால் திருமுறைப் பாராயணமும் நடைபெறும். இந்த வேத பாராயணமும், திருமுறைப் பாராயணமும் கேட்டால், வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்பது ஐதீகம். வேத பாராயணங்கள் நம் காதில் விழுந்தால் செல்வம் சேரும்.
சக்தி நிறைந்த புனித நீர்………
கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்பு மூல விக்கிரத்தில் உள்ள சக்தியை கும்பத்துக்கு வரவழைப்பார்கள். அதாவது மூலவர் ஆற்றல் பிம்பத்தில் இருந்து கும்பத்துக்கு வந்து விடும். இதையடுத்து திருப்பணிகள் நடைபெறும். இதற்கிடையே கும்பத்தில் உள்ள சக்தியை பாலாயம் செய்து பூஜைகள் செய்து வருவார்கள்.
யாக சாலை பூஜைகள் தொடங்கியதும் பாலாலயத்தில் இருந்து சக்தியை பெற்று புனித நீர் நிரம்பிய கும்பத்தில் வைத்து சிறப்பு ஆராதனைகள் நடத்தப்படும். யாக சாலை பூஜைகள் முடிந்ததும் வேத பாராணயங்களால், திருமுறை பாராயணயத்தால் சக்தி ஏற்றப்பட்ட புனித நீர் அபிஷேகம் செய்யப்படும். இதன் மூலம் மூலவர் விக்கிரகம் புதிய சக்தியை பெறும்.
மக்களும் அதன் அருளால் நன்மைகள் பெறுவார்கள். மகா கும்பாபிஷேகத்தின் போது புனித நீர் பக்தர்கள் மீதும் தெளிக்கப்படும். இந்த புனித நீர் நம் மீது பட்டால் நமது பாவம் எல்லாம் தொலைந்து போகும். நம் சுத்தப்படுத்தப்பட்டு விட்டோம் என்பது ஐதீகமாகும்.
**திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


சிவாலய வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

 


ஒரு சிறு புல்லைக்கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு இத்தனை உணவும், உடையும், மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி கூறும் அடையாளமாகவே நாம் நிவேதனம் செய்கிறோம். ஆபரணங்களையும் வஸ்திரங்களையும் சமர்ப்பிக்கிறோம். எல்லாருமே வீட்டில் இவ்வாறு பூஜை செய்து, திரவியங்களை ஈசுவரார்ப்பணம் செய்ய இயலாது.
எனவே, சமுதாயம் முழுவதும் சேர்ந்து இப்படி சமர்ப்பணம் பண்ணும்படியான பொது வழிபாட்டு நிலையங்களாக ஆலயங்கள் எழுந்துள்ளன. இறைவனுக்கு நன்றி செலுத்துவதைத்தான் பரார்த்த பூஜையாக, நிஷ்காம்ய வழிபாடாக, ஆலயங்களில் செய்கிறோம்.
1. அரணிக்கட்டையுள் நெருப்பு மறைந்துள்ளது போல, மலரில் மணம் மறைந்துள்ளது போல ஈச்வரன் பிம்பத்தில் (லிங்கத்தில்) உள்ளார். பாலை விட, தயிரிலிருக்கும் நெய்யைக் கண்டெடுப்பது எளிது. உலகெங்கிலும் பாலில் மறைந்துள்ள நெய் போல் உறையும் இறைவன், ஆலயத்தில் தயிரினுள் மறைந்திருக்கும் நெய் போல எளிதில் நமக்கு முன் வந்து அருளக் காத்திருக்கிறான்.
2. ஆகமங்களில் விதித்துள்ள சிற்ப சாஸ்திரங்களுக்கொப்ப அமைந்துள்ள திருக்கோவில்களே பரம்பொருள் வீற்றிருக்கும் தேவாலயங்கள். ஆகம விதிப்படி அமையாத ஆலயங்கள் மடாலயங்கள் எனப்படும்.
3. சிவலிங்கம் இருக்கும் இடத்திலிருந்து நான்கு புறமும் 150 முழ தூரம் சிவ÷க்ஷத்ரம் ஆகும். இங்கு வசிப்பதுமச் சிவலோகவாசத்திற்கு காரணமாகும் என்று சுப்ரபேத ஆகமம் கூறுகிறது
4. முன் ஜன்மாவில் சிவ கைங்கர்ய உபகாரிகளாக வாழ்ந்தவர்கள், இந்த ஜன்மாவில், நல்ல உருவமும், தன ப்ராப்தியும் உடையவர்களாக காணப்படுவார்கள். சிவ தர்மத்தில் – பக்தியுடன், தன் சொத்துக்குத் தகுந்தபடி, ஆலயங்களை ஒவ்வொருவரும் செய்விக்க வேண்டும்.
அப்படிச் செய்தால், சிறிதாக அல்லது பெரிதாக செய்தாலும், தனவானுக்கும் ஏழ்மையானவர்களுக்கும், சமமான புண்யமே. பணக்காரராயினும், லோபமான மனஸுடன் பணத்தைக் குறைத்து சிவதர்மங்களைச் செய்பவர், அப்புண்ய பலனை அடைய மாட்டார். வாழ்வு நிலையற்றது.
எனவே, ஒவ்வொருவரும் தன் சொத்தில் இரு பங்கு தர்மத்திற்கும், தனது வாழ்விற்கு ஒரு பங்குமாக ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்கிறது ஜீர்ணோத்தார தசகம்.
5. மனத்தை ஒருவழிப் படுத்தவும், கீழ்ப்படிவு, நீதி வழி நிற்றல், தன்னலம் மறுப்பு, பணிவு, இரக்கம் ஆகிய பல சிறந்த பண்படுகளை உண்டாக்கி வளர்க்கவும், இறுதியாக மோக்ஷ ஸாம்ராஜ்யம் அடைந்திட வழி வகுக்கவும் திருக்கோயில் வழிபாட்டைத் தவிர வேறு மார்க்கம் இல்லை.
6. சாதாரணமாக, நம் கைகள் இரண்டு விரிந்து, வளைந்து, பற்பல செய்கைகளைச் செய்கின்றன. இறைவனுடைய ஸந்நிதானத்தில் கும்பிடும்போது, அத்தகைய செய்கைகள் எல்லாம் ஒழிந்து, கைகள் ஒன்று சேர்ந்து குவிகின்றன.
அவ்வாறு குவிந்திடும் கைகள் ஆண்டவனே ! இனி என் செயல் என்று ஏதும் இல்லை என்பதை உணர்ந்துவிட்டேன். எல்லாம் உன் அருட் செயலே என்ற சரணாகதி தத்துவத்தை உணர்த்துகின்றது.
7. ஆலயங்களில் விக்ரஹ ஆராதனை முக்கியத்துவம் பெறுகிறது. உலகத்தில் சக்திகள் யாவும் உறையும் இடம் என்று பொருள் தருவது விக்ரஹம் என்ற சொல் (விஸேஷேண க்ருஹ்யதே ஸக்திஸமூஹ: அஸ்மின் இதி விக்ரஹ:) வி என்றால் விசேஷமான, சிறப்பான, இறைத்தன்மையுள்ள என்று பொருள். க்ரஹிப்பது என்றால் ஈர்த்துக்கொள்வது.
பல்வேறு மந்த்ர தந்த்ர யந்த்ர வழிபாட்டு முறைகளினால் ஆராதிக்கப்படும்போது, இறையருளை முன்வைத்து, இறைத்தன்மையை ஈர்த்துத் தன்னுள் தேக்கி வைத்துக்கொண்டு, தன்னை வணங்குவோருக்கு அருள் புரியும் வல்லமை உள்ள பொருள்தான் விக்ரஹம்
8. விக்ரஹங்கள் பல திறத்தன: பொருள் பொதிந்து விளங்குவன. எடுத்துக்காட்டாக, இறைவன் உருவமற்றவன்: அருவமானவன். அவனுக்கு அருவுருவமாகிய லிங்க ப்ரதிஷ்டை கருவறையிலே. அவனுக்கே, மாகேச்வர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படும் 25 உருவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
(அவையாவன: 1. லிங்கோத்பவர் 2. சுகாசனர் 3. சந்திதர மூர்த்தி 4. கல்யாண சுந்தரர் 5. அர்த்த நாரீச்வரர் 6. ஸோமாஸ்கந்தர் 7. சக்ரவரதர் 8. திரிமூர்த்தி 9. ஹரிமர்த்தனம் 10. சலந்தராரி 16. திரிபுராரி 17. சரப மூர்த்தி 18. நீலகண்டர் 19. திரிபாதர் 20. ஏகபாதர் 21. பைரவர் 22. இடபாரூடர் 23. சந்திரசேகரர் 24. நடராஜர் 25. கங்காதரர்).
இவை 25 விக்ரஹங்களுள் ஒவ்வொன்றும், பற்பல தத்துவங்களை உள்ளடக்கியவை. மீண்டும் எடுத்துக்காட்டாக, சோமாஸ்கந்த மூர்த்தியை எடுத்துக் கொண்டால், ஸச்சிதானந்தமே சோமாஸ்கந்தம் என்கிறார் காஞ்சிப் பரமாச்சாரியார். அவர் கூற்றுவது: ஸத்-சித்-ஆனந்தம் என்று சொல்வார்களே அதுதான் பரம்பொருள். இதிலே ஸத் (இருப்பு) பரமேச்வரன்; இருக்கிறோம் என்பதை உணர்ந்து சக்தியைக் காட்டுகிறது சித் அம்பாள்: இப்படி உணர்ந்ததில் பேரானந்தம் பிறக்கிறது.
இந்த ஆனந்தமே சுப்ரமண்யர். சிவம் என்கிற மங்களமும், அம்பாள் என்கிற காருண்யமும் கலந்த மரம் பரம உத்க்ருஷ்டமான (உயர்வான) ஸ்தானம் அவர் (ஸுப்ரஹ்மண்யர்); ஸச்சிதானந்தத்தையே சோமாஸ்கந்தர் என்று தமிழ்நாட்டுச் சிவாலயங்களில் எல்லாம் வைத்து உற்சவம் நடத்துகிறோம்.
9. இறைவனை அடையும் வழிகள் ஒன்பது என்பர்: (1) ச்ரவணம் – கேட்டல், இறைவன் புகழ் கேட்டல் – உதாரணம்: ஹனுமான், (2) கீர்த்தனம் – பாடுதல், நாதோபாஸனை – உதாரணம்: வால்மீகி, தியாகராஜ ஸ்வாமிகள். (3) ஸ்மரணம் – நினைத்தல், நின்றும் இருந்தும் கிடந்தும் அவனையே நினைப்பது – உதாரணம்; ஸீதாதேவி, (4) பாதசேவனம் – சேவித்தல் – உதாரணம்: பரதன், (5) அர்ச்சனம் – பூஜித்தல் – உதாரணம்: சபரி, கண்ணப்ப நாயனார், சாக்கிய நாயனார், (6) வந்தனம் – நமஸ்கரித்தல், வந்தித்தல் – உதாரணம்: விபீஷணன். (7) தாஸ்யம் – தொண்டு புரிதல் – உதாரணம்: லக்ஷ்மணன், திருநாவுக்கரசர்.
(8) ஸக்யம் – சிநேக பாவம் – உதாரணம்: சுக்ரீவன், அர்ஜுனன், சுந்தரர். (9) ஆத்ம நிவேதநம் – தன்னையே அர்ப்பணித்தல் – உதாரணம்: ஜடாயு. இந்த ஒன்பது வழிகளுள் ஏதாவது ஒன்றை உறுதியாகப் பற்றுவதே இறைவனை அடைவதற்கு போதுமானது. இவற்றுள் கடைசி இரண்டைத் தவிர, ஏழு முறைகளில் வழிபட ஆலயங்களே வகை செய்வது குறிப்பிடத்தக்கது.
10. இவ்வாறு ஆலய வழிபாட்டை மையமாக வைத்து அமைக்கப்பட்ட வாழ்க்கை முறையே சிவதன்மம் ஆகிறது. சிவதன்மம் என்றால் சைவ ஒழுக்கம் என்று பொருள். சிதம்பரம் மறைஞானதேசிகர் (கி.பி.1560) சிவாகம பரிபாஷா மஞ்சரி என்ற வடமொழி நூலில் சிவதன்மம் பத்துக் கோட்காடுகளைக் கொண்ட நெறி என்கிறார்.
1. அஹிம்சை. 2. தயை, 3. சத்யம், 4. அடக்கம் 5. வளம், 6. புலனடக்கம் 7. எளியோர்க்கு வழங்குதல், 8. தியாகம், 9. ஜபம், 10. தியானம் – அல்லது 1. அஹிம்சை, 2. சத்யம், 3. பிறர் பொருள் விழையாமை, 4. சிற்றின்பம் துறத்தல், 5. அவா ஒழித்தல், 6. க்ரோதம் தவிர்த்தல், 7. பெரியோரைப் போற்றுதல், 8. தூய்மை, 9. துயறுற்றலும் மகிழ்வுடன் இருத்தல், 10. நேர்மை என்றபடி. இக்கோட்பாடுகள் அனைத்தும் ஆலய வழிபாட்டு நெறிக்கும் இன்றியமையாததாக இருப்பது கவனிக்கத் தக்கது.
11. எனவே, ஆலயத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கையில், நீறு இல்லா நெற்றி பாழ்; சிவாலயம் இல்லா ஊர் பாழ்; சிவபூஜை இல்லா ஜன்மம் பாழ்; சிவனை அடையா வித்யை பாழ் என்று ஆகமங்கள் வலியுறுத்துகின்றன.

*திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


புண்ணியங்கள் தரும் நமஸ்காரம்

 

நமஸ்காரம் எனும் சொல்லுக்கு வணக்கம் செலுத்துகின்றேன் என்று பொருள். வணக்கம் செலுத்துதல் மிக நாகரீகமான மரபு. மாதா எனும் அன்னைக்கும், பிதா எனும் தந்தைக்கும் தினமும் பாத பூஜை செய்பவருக்கும், பாதத்தைத் தொட்டு வணங்குபவருக்கும் ஏழேழு ஜன்மங்களிலும் செய்த பாவம் தொலையும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றது.
பாதத்தைத் தொட்டு வணங்குதலுக்கு உரியவர்கள் பெற்றவர்களே. வித்யை எனும் கல்வியை வழங்கும் குருவுக்கு வணக்கம் செலுத்துவது இரு கைகளையும் நெற்றிக்கு நேராக கூப்பிய வண்ணம் செய்வது குருவருளை பெறத்தக்கது.
தெய்வங்களை வணங்குவது இரு கைகளையும் மேலே தூக்கி அஞ்சலி செய்வது தெய்வப்பலன்களைப் பெறக்கூடியது. இரு கைகளையும் தூக்கி வணக்கம் செய்வது சரணாகதி தெய்வமே கதி என்பதைக் காட்டுகின்றது. சக மனிதர்களுக்கும், இதயத்துக்கு இதமான நண்பர்களுக்கும் வணக்கம் செலுத்துவது இரு கைகளையும் இருதயத்துக்கு நேராக கூப்புவது நலம் பயக்கும்.
மரியாதைக்கு உரியவர்களை, நம் முகத்துக்கு நேராக இரு கைகளையும் கூப்பிச் செய்வது நல் அபிப்ராயத்தைப் பெற உதவும். வணக்கம் என்பது இணக்கம் ஏற்படுத்தக் கூடியது. நல்ல மதிப்பைப் பெறக் கூடியது. வணக்கம் சொல்லி எந்த ஒரு விஷயத்தையும் ஆரம்பிப்பது வெற்றியாக முடியும்.
பிரச்னைகளுக்குரிய இடத்தில் கூட, விரோதியாக இருப்பவருக்குக் கூட வணக்கம் செலுத்துவது சுணக்கத்தை நீக்கி இணக்கத்தைத் தரக்கூடியது.
நமஸ்கரிக்கும் வழக்கம் தொன்று தொட்டு வரக்கூடியது. வேத காலத்திலிருந்தே நமஸ்கரிக்கும் வழக்கம் இருந்திருக்கின்றது.
நான்கு வேதங்களில் இரண்டாவதாக இருக்கும், யஜுர் வேதத்தின் இருதயம் போன்று இருக்கும் ஸ்ரீ ருத்ரம் எனும் மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது.
அந்த ஸ்ரீ ருத்ர மந்திரத்தின் சிறப்பு பகுதியாக விளங்குவது ருத்ரனை நமஸ்கரிக்கும் விதமாக அமைந்த நமகம் பகுதி.”ருத்ராயா ததாவினே க்ஷேத்ராணாம் பதயே நமோ நமோ” (துன்பங்களைத் துடைப்பவரும், உலகைப் படைத்துக் காப்பவரும் ஆகிய ருத்ரனாகிய பரமேஸ்வரனுக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம்).
நமகம் எனும் மந்திரத்தை உள்ளடக்கிய ஸ்ரீ ருத்ரத்தைச் சொல்வதும், கேட்பதும் பரமேஸ்வரனையே ஆயிரத்து எட்டு முறை வலம் வந்து நமஸ்கரித்தலுக்கான பலன் கிடைக்கும். ஸ்ரீ ருத்ர மந்திரங்களால் மகேஸ்வரனை மானசீகமாக நமஸ்கரிப்பது மகத்தான பலனைத் தரக்கூடியது.
சைவ வேதம் என்று போற்றக் கூடிய பன்னிரு திருமுறைகளில், திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரத்தில், நின்ற திருத்தாண்டகம் எனும் பகுதி வடமொழியில் அமைந்த ஸ்ரீ ருத்ரத்தின் தமிழின் நேர் வடிவம் என்று ஆய்வாளர்கள் மதிக்கின்றார்கள்.
நின்ற திருத்தாண்டகம் பாடும்போதும், கேட்கும்போதும் சிவனை நமஸ்கரிப்பது சிறந்த பலனைத் தரக்கூடியது. ”மாதா பிதாவாகி மக்களாகி மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்கோதா விரியாய்க் குமரி யாகிக்கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்போதாய மலர்கொண்டு போற்றி நின்றுபுனைவார் பிறப்பறுக்கும் புனித னாகியாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகிஅழல்வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே.” (நின்ற திருத்தாண்டகம்)
தெய்வங்களை வணங்கும் வகைகள் பற்றி சாஸ்திரங்கள் கூறுவதைப் பார்ப்போம்.
தெய்வ ஸன்னிதானத்திலுள்ள தெய்வங்கள் அனைத்தையும் வணங்கிவிட்டு, ஆலயத்தில் கொடிமரம் இருந்தால் தெய்வத்திற்கும் கொடிமரத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் இல்லாமல், கொடிமரத்திற்குப் பின்னே நமஸ்கரிக்க வேண்டும். கொடிமரத்திற்கும் தெய்வ ஸன்னிதானத்திற்கும் இடையில் நமஸ்கரிக்கக் கூடாது.
முதலில் ஆண்கள் செய்யக்கூடிய நமஸ்காரம் பற்றிக் காண்போம்.
அஷ்டாங்க நமஸ்காரம் ஆண்கள் செய்யக் கூடியதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. உடல் முழுவதும் முதலில் பூமியில் படும்படி பொருத்தி,
வலது கையை முதலில் தலைக்கு நேரே தூக்கி பிறகு இடது கையை தலைக்கு நேரே தூக்கி அஞ்சலி (கூப்பிய கரம்) செய்யவேண்டும். முகத்தை நேராக தரையில் கொண்டு வந்து நெற்றியைத் தரையில் படச் செய்து, முன்னர் செய்தது போல வலக்கையை இடுப்புக்கு நேரே கொண்டுவந்து, வலது புஜம் எனும் வலது தோள் தரையில் படச்செய்து, பிறகு இடது கையை இடுப்புக்குக் கொண்டு வந்து,
இடது தோளைத் தரையில் படச்செய்ய வேண்டும்.
பின்னர், முதலில் வலது காதையும் பிறகு இடது காதையும் தரையில் படச்செய்ய வேண்டும். பின்னர் மோவாய் தரையில் பட வேண்டும்.
இதுவே ஸாஷ்டாங்க (எட்டு அங்கங்களும் – எட்டு உறுப்புகளும் தரையில்படக்கூடிய) நமஸ்காரம் எனப்படும்.
இறைவன் படைத்த உடல் இறைவனுக்கே அர்ப்பணம் எனும் செயலைக் காட்டுவதே அஷ்டாங்க (8 உடல் உறுப்புகள்) நமஸ்காரம். இந்த நமஸ்காரம் தெய்வீகப் பலனை வாரி வழங்கக் கூடியது.
பெண்கள் செய்யக் கூடியது பஞ்சாங்க நமஸ்காரம் ஆகும்.
பெண்கள் முதலில் இரண்டு முழங்கால்களைத் தரையில் பொருந்தச் செய்து, முதுகை வளைத்து, பின் இரண்டு கைகளையும் கூப்பியவாறு தரையில் படச் செய்து, பின் நெற்றியினை தரையில் படச் செய்ய வேண்டும்.
இதுவே ஐந்து உடல் உறுப்புகள் தரையில் படச்செய்யும் பஞ்சாங்க நமஸ்காரம் ஆகும். பெண்களுக்கு நல்வாழ்க்கையும், சுமங்கலிகளுக்கு நீடித்த மணவாழ்க்கையையும் அருளுவது பஞ்சாங்க நமஸ்காரம் ஆகும். பெண்களின் திருமாங்கல்யம் எந்நிலையிலும் தரையில் படக்கூடாது.
அங்கப்ரதஷ்ணம் : தெய்வங்களுக்கு அங்க பிரதஷ்ணம் செய்வது என்பது ஒரு விசேஷ வழிபாடு. உடலின் அனைத்து பாகங்களும் தரையில் படும்படி நமஸ்கரித்துக் கொண்டே ஆலயத்தை வலம் வருவது பெரும் புண்யங்களைத் தரக்கூடியது. பக்தர்கள், பெரியோர்கள், தவசீலர்கள் வலம் வந்த பாதையில் அவர்களின் பாதங்கள் பட்ட இடங்களையும் நமஸ்கரிப்பதால், அடியவர்க்கும் அடியவராக விளங்கக்கூடிய பெருமானின் பூரண அருளைத் தரக் கூடியது.
‘நான்’ என்ற அகந்தையை நீக்கக் கூடியது. இறைவன் ஒருவனைத் தவிர வேறு கதியில்லை என்ற செயலைக் காட்டுவது அங்க பிரதஷ்ணம் ஆகும்.
யாரை நமஸ்கரிக்கக் கூடாது ?
இறைவனை எண்ணிக்கொண்டு ஜெபம் செய்து கொண்டிருப்பவரையும், தானம் செய்து கொண்டிருப்பவரையும், தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருப்பவரையும், யாகங்கள் செய்து கொண்டிருப்பவரையும், தர்ப்பணம் செய்து கொண்டிருப்பவரையும், சிரார்த்தம் செய்பவரையும் நமஸ்கரிக்கக் கூடாது.
பெரும் புண்ணியம் நல்கும் நமஸ்காரம்
பெரும் தவசீலர்கள் உள்ள சபையிலும், தெய்வங்கள் உறைந்திருக்கும் யாகசாலையிலும், ஆலயங்களிலும், புண்ணிய தீர்த்தங்களை நோக்கியும், வேத கோஷம் முழங்கும் இடங்களிலும் செய்யக் கூடிய பிரத்யேக நமஸ்காரங்கள் பலமடங்கு புண்ணியங்களைத் தரக்கூடியது.
நமஸ்கரிக்கும் திசை :
நமஸ்கரிக்கும் போது நமது தலை கிழக்கு நோக்கியோ அல்லது வடக்கு நோக்கியோ அமையவேண்டும். தெற்கு நோக்கி நமஸ்கரித்தல் கூடாது.
புண்ணியங்கள் தரும் நமஸ்காரம் பற்றி அறிந்தோம்.
பெரும் புண்யத்தையும் தேக ஆரோக்கியத்தையும் நல்கக் கூடியது “சூர்ய நமஸ்காரம்” ஆகும். சூர்ய நமஸ்காரமும் வேத காலத்திய பழமை வாய்ந்தது. சூர்ய நமஸ்காரம் பற்றி யோக சாஸ்திரங்கள் பல்வேறு விதமானப் புகழாரங்களைக் கூறுகின்றன.
வைதீக சம்பிரதாயங்களில் சூர்ய நமஸ்காரம் பிரதான இடம் பெறுகின்றது. வேதங்கள் போற்றும் வேதநாயகர் சூர்யபகவான். ”நமஸ்கார ப்ரியோ பானு:” என்ற சொல்வழக்கப் படி, உலகை ஜீவிக்கக் கூடிய உலக நாயகனாகிய சூர்ய பகவானை வேத மந்திரங்கள் (அருண ப்ரச்னம்) சொல்லி வணங்குவது நல் தேக ஆரோக்கியத்தையும், தெளிவான கண் பார்வையையும், நீடித்த ஆயுளையும், நல்லறிவையும் நல்கக் கூடியது.
சூர்ய பகவான் ஸஹஸ்ர வியாகரண பண்டிதர் என்றும் அனைத்துக் கலைகளுக்கும் நாயகன் என்றும் லோக குரு என்றும் பத்ம புராணம் கூறுகின்றது.
கண்கண்ட தெய்வமான, லோக குருவான சூர்ய பகவானிடம் பாடம் கற்க விருப்பம் தெரிவிக்கின்றார் ஹனுமன். சூர்ய பகவான் தன்னால் ஒரு இடத்தில் நின்று பாடம் சொல்லித் தர இயலாது என்கின்றார். அதற்கு ஹனுமன் சூர்யன் சுற்றி வரும் பாதையிலேயே, அவரை நோக்கிய வண்ணம் பின்புறம் நடந்துகொண்டே, கைகள் கூப்பிய வண்ணம் பாடம் கற்கின்றார்.
அவரை “நவ வியாகரண பண்டிதர்” என்று புராணங்கள் புகழும். சூர்யனிடம் பாடம் கற்றதால் பெரும் அறிவாளியாகின்றார், ஆகையால் அவர் சொல்லின்செல்வர் என்று புகழப்படுகின்றார்.
சாக்த வழிபாடு என்பது சக்தியை அம்பிகையை வழிபடுவது. இந்த சாக்த வழிபாட்டின் உச்ச நிலை வழிபாடாகிய ஸ்ரீ துர்கா ஸப்தசதீ (சண்டி ஹோமத்தின் போது சொல்லப்படக் கூடிய எழுநூறு ஸ்லோகங்கள்) எனும் ஸ்லோகங்கள் அம்பிகையின் அருட்கடாட்சத்தை அருளக்கூடியது.
பதின்மூன்று அத்தியாயங்கள் கொண்ட துர்கா ஸப்தசதீயின் ஐந்தாவது அத்தியாயம் மிக முக்கியம் வாய்ந்தது. அருட்செயல்கள் புரிந்த தேவியை நமஸ்கரிக்கும் விதமாக அமைந்தது ஐந்தாவது அத்தியாயம் . ”யா தேவி ஸர்வபூதேஷ¤ மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: (அனைத்துலகையும் ஈன்று எடுத்த அன்னை வடிவாகிய அம்பிகைக்கு வணக்கம். மீண்டும் வணக்கம். என்றென்றும் வணக்கம்)
இந்த அத்தியாயத்தில் வரும் மற்ற ஸ்லோகங்களிலும் வரும் “நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: ” என்று சொல்லும்போதெல்லாம் அம்பிகையை நமஸ்கரிப்பது, வாழ்வில் ஏற்படக் கூடிய துன்பங்கள் அனைத்து அகற்றி, அளவற்ற அருளை பெறக் கூடியது.
நமஸ்காரங்கள் செய்து நமஸ்கரிப்பதால் ஏற்படும் நற்பலன்களைப் பெறுவோம்.


*திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்Monday, May 27, 2013

சுந்தர காண்டம் சத்சங்கம் வழங்குபவர் திரு . ஜோசப் அவர்கள்

http://mayuren.org/site/mayurengorg/1Tamil/Audio%20Books%20-%20Tamil%20Collection/D%20A%20Joseph%20%20Sundara%20Kaandam


ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்

ராமாயணம் முழுவதையும் படிக்க முடியாதவர்கள் கீழ்க்கண்ட ஒன்பது வரிகளை மட்டும் பக்தியுடன் பாராயணம் செய்தால் ராமாயணத்தைப் படித்த முழு பலனும் கிடைக்கும். மேலும், சகல நல்ல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானு கூலம்
சததம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்


இந்த ஒன்பது வரிகளை தினமும் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீ ஐயப்ப பூஜை சத்சங்கம்

Sunday, May 26, 2013

அர்த்தமுள்ள இந்து மதம் சத்சங்கம் வழங்குபவர் கவியரசு கண்ணதாசன்

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் சத்சங்கம் வழங்குபவர் திரு . சுகி சிவம்

மகாபாரதம் சத்சங்கம் வழங்குபவர் திரு. சுகி சிவம் அவர்கள்

பெரியாழ்வார் கண்ட திருவேங்கடமுடையான் உபன்யாசம் வழங்குபவர் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள்

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் அவர்களின் ஸ்ரீ நரசிம்மனும் ஸ்ரீ ராமானுஜரும் உபன்யாசம்

திருகல்யாணம்

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் அவர்களின் திருப்பாவை உபன்யாசம்

Vedartha-sangraha of Sri Ramanujacarya

கம்பன் கவியரங்கம்

வெற்றி நிச்சயம் வழங்குபவர் திரு . கவனகர் கனக சுப்புரத்தினம் அவர்கள்

நமச்சிவாய திருப்பதிகம்
*


4.011.நமச்சிவாயப்பதிகம்

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்


இது சமணர்கள் கற்றூணிற்கட்டிக் கடலிலே வீழ்த்தினபோது ஓதியருளியது.


104 சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
4.011.1

வேதமான வாசகத்திற்கு நிகரான வாக்கியப் பொருளாக உள்ளவனாய்ப் பரஞ்சோதியாகிய அழியாத வீட்டுலகினனாய் உள்ள எம்பெருமானுடைய, பொலிவுடைய, தமக்குத்தாமே இணையான சேவடிகளை உள்ளம் பொருந்தக் கைதொழுதலால் கல்லைத் துணையாகச் சேர்த்து அதனோடு இணைத்துக் கடலில் தள்ளிவிட்டாலும் எம்பெருமானுடைய திருவைந்தெழுத்தே நமக்குப் பெரிய துணையாகும்.


105 பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கல நமச்சி வாயவே.
4.011.2

பூக்களுக்குள் விலைமதிப்பரிய ஆபரணம்இதழ்கள் மிக்க தாமரையாகும். பசுக்களுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் சிவபெருமான் அபிடேகத்துக்குப் பஞ்சகவ்வியம் உதவுதல். அரசனுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் செங்கோல் வளையாமல் ஆட்சி செய்வதாம். நாவினுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் திருவைந்தெழுத்தேயாகும்.


106 விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
4.011.3

வானளாவ அடுக்கிய விறகிலே கொடிய நெருப்பு அவற்றை உண்பதற்கு உள்ளே புகுந்தால் விறகினுள் ஒன்றும் மீதியிராது எல்லாம் சாம்பலாகும். இறைவனால் படைக்கப்பட்ட உலகில் மக்கள் பலகாலும் பழகிச் செய்த பாவத்தை நெருங்கி நின்று போக்குவது திருவைந்தெழுத்தேயாகும்.


107 இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்.
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
4.011.4

எவ்வளவு வறுமைத் துன்பத்தால் நலிவுறினும் எம்பெருமானை விடுத்து வேறுயாரையும் இரந்து 'என் துன்பத்தைப் போக்கினால் நீ எம்பிரானே' என்று கூறித் துயரத்தைப் போக்கு எனக் கேட்போம் அல்லோம். மலையின் அடியில் அகப்பட்டுக் கிடந்தாலும் அருளினால் நமக்கு ஏற்படும் நடுக்கத்தை நீக்குவது திருவைந் தெழுத்தேயாகும்.


108 வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கல நமச்சி வாயவே.
4.011.5

விரதத்தை மேற்கொண்ட சான்றோர்களுக்குத் திருநீறு சிறந்த அணியாகும். நான்மறை ஆறங்கம் ஓதுதல் அந்தணர்களுக்குச் சிறந்த அணியாகும். பிறைக்குச் சிவபெருமானுடைய அழகிய சடை சிறந்த அணியாகும். எம்மைப் போன்ற அடியார்களுக்குச் சிறந்த அணி திருவைந்தெழுத்தேயாகும்.


109 சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமில னாடொறு நல்கு வானலன்
குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.
4.011.6

மனக்கோட்டம் இல்லாது எல்லார்க்கும் நன்மையைச் செய்யும் சிவபெருமான், தன்னையே பற்றுக்கோடாகச் சார்ந்த அடியவர்களைத் தவிர மற்றவர்களுக்கு உயர்நலன் செய்யான். அவர்களுக்கு நாடோறும் விரும்பியதனை நல்காது வினைப்பயன்படி நுகருமாறு விடுப்பான். உயர்ந்த குடும்பத்தில் அடியவர்கள் பிறந்தவர் அல்லராயினும் நற்குலத்துக்குரிய நன்மைகளை மிகவும் கொடுப்பது எம்பெருமானுடைய திருவைந்தெழுத்தேயாகும்.


110 வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினா ரந்நெறி கூடச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினே னாடிற்று நமச்சி வாயவே.
4.011.7

மேம்பட்ட தொண்டர்கள் உலகப்பற்றுக்களை நீக்கிவிட்டனர். அவர்கள் மேம்பட்ட வீட்டு நெறியையே அடைந்தனர். அடியவர்கள் கூட அடியேனும் ஓடிச் சென்று எம்பெருமான் திருவுருவத்தை அகக்கண்ணால் கண்டேன். அங்ஙனம் கண்டவுடன் திருவைந்தெழுத்தை நாடினேன். நாடிய என்னை அத்திருவைந் தெழுத்தும் நாடியது.


111 இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
4.011.8

வீட்டில் உள்ள விளக்கு ஆங்குள்ள இருளைப் போக்குவதாம். சொல்லின் அகத்து நின்று விளக்குவதாய், ஒளியுடையதாய், பல இடங்களையும் விளக்குவதாய்ப் பல சமயத்தாரும் தம்மை அறியாமலே காண நிற்பதாய் ஞானம் நிறைந்த உள்ளத்திற்கு விளக்குப்போல ஒளியை நல்குவது திருவைந்தெழுத்து மந்திரமே.


112 முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாத றிண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே.
4.011.9

முந்துறமுன்னம் வீடுபேற்றிற்கு வழிகாட்டிய முதல்வன் முக்கட்பிரானாவான். அவன் அருளிய வழியே உறுதியாகப் பற்றுக் கோடாவது. அந்த வழியிலே சென்று அப்பெருமானுடைய திருவடிகளை அடைபவருக்கு எல்லாம், சிறந்த வழியாக உதவுவது திருவைந்தெழுத்து மந்திரமே.


113 மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
4.011.10

மான்குட்டியைக் கையிலேந்திய, பார்வதி பாகனுடைய பூமாலைகள் சார்த்தப்பெற்ற திருவடிகளை உள்ளம் பொருந்தக் கைதொழுவதற்கு நாவை இணைந்து தழுவிய திருவைந்தெழுத்தைப் பற்றிய இப்பத்துப்பாடல்களை வழிபட வல்ல அடியவர்களுக்கு எத்தகைய துயரங்களும் ஏற்படமாட்டா.


திருச்சிற்றம்பலம் 

திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

வேதாத்ரியம் சத்சங்கம் வழங்குபவர் திரு. தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள்
*கம்ப ராமாயணத்தில் அறிவியல் சத்சங்கம் திருச்சி புலவர் ராமமூர்த்தி
*


நம்மாழ்வார் பற்றிய சத்சங்கம் வழங்குபவர் திரு. ஜோசப் அவர்கள்
*